Wednesday, February 24, 2010

இருப்பது நானல்ல!!

நாம் முதன்முதலில் சந்தித்தது, சென்னை விப்ரோவில்.
காபி குடிக்க வந்த வித்தி என்னிடம் கேட்ட முதல் கேள்வி: "அந்த ஏழு பேர் நீங்க தானா?"
ஏழு பேர் நாம் மூன்று பேர் ஆனது சுவாரசியம்.


♥♥♥


அந்தி நேரத்தில் கூடு தேடிச் செல்லும்
அன்னங்கள் போல் மூவரும் ஒன்றானோம்;
சிறிது காலத்தில் நம் பாதைகள் மாறுமென்று அறியாமலே!
எவ்வளவு சுகமான பயணம் அது!
மகிழ்ச்சி தருணங்கள் நிறைந்திருந்த காலம் அது!


♥♥♥


தன்யா, வித்யா: இந்த இரண்டு கவிதைகள் தான் என் நட்பின் பிரதானம்!
என் பள்ளி, கல்லூரி நட்பெல்லாம் உண்மையில் ஒன்றும் இல்லை என உணர வைத்த கவிதைகள்.


♥♥♥


அம்மாவின் முந்தானையிலிருந்து தொலை தூரம் வெளி வந்து உங்கள் நட்பின் போர்வைக்குள் பத்திரமாய் புகுந்து விட்டேன்!


♥♥♥


நம் மூவரை தாண்டி நாம் எவரை பற்றியும் சிந்தித்ததில்லை.
அதற்கு, நமக்கு கிடைத்த பரிசு, “மூவேந்தர்” பட்டம்.
சில சமயம் சுயநலம் மிக அழகானது! இல்லையா?


♥♥♥


உங்களிடம் எதுவும் மறைத்ததில்லை.
அம்மாவிடம் சொல்ல தோன்றாத விஷயமும் உங்களிடம் சொல்லிவிடுவேன்.
ரகசியங்கள் நமக்கு அலர்ஜி!


♥♥♥


சில சமயம் அம்மா, “பிரெண்ட்ஸ் கிட்டே சொல்லாதே” என்று கூறும்பொழுது, கோபமும் அழுகையும் மாறி மாறி வரும்.
ஆனால், அம்மா பேச்சை தட்ட முடியாதே. அதனால், உங்களிடம் சொல்ல மாட்டேன்.
SMS அனுப்பிவிடுவேன்.


♥♥♥


“நீ கூட இல்லைனாலும், என் மனசில் எப்போதும் இருப்பே” என்ற இனிப்பு கலந்த வாக்கியத்தை நான் கூற விரும்பவில்லை.
உங்கள் நினைவு என்னிடம் இருந்தாலும், நீங்கள் என்னுடன் இல்லை என்பது தானே கசக்கும் உண்மை?


♥♥♥


யாராவது, “நீ மாறிட்டே” என்று சொன்னால்,
“ஆமாம். அழகாய்” என்று பதில் கூறுவேன்.
இருப்பது நானல்ல. உங்களின் பிம்பமே!


♥♥♥


இவையாவும் கவிதைகள் அல்ல. என் எண்ணங்கள்.
மொக்கையாய் இருந்தாலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
ஆஷா என்றாலே மொக்கைதானே?! :)


♥♥♥