Wednesday, May 12, 2010

ஆசா, நீ ரொம்ப நல்லவ செல்லம்!!

ஒரு மனுசன் பொறந்ததிலிருந்து சாகற வரைக்கும் அவனுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ பல அல்லது சில நல்ல காரியங்களை செஞ்சிருப்பான். அதை எல்லாம் வெளிய சொல்ல கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா, நம்ம தல கவுண்டர் என்ன சொல்றார்? 'நீ சொல்றத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வை. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதே பார்த்து புரிஞ்சு தெளிவா நடந்துக்குவாங்க.' அவர் 'சொல்றத'னு சொன்னாலும் நாம நல்லது செய்யுறதையும் இப்படி வெளிய சொன்னா தான மத்தவங்களுக்கு ஒரு இதுவா இருக்கும். அதாங்க inspiration. அதனால, போன மாசத்துலே இருந்து இந்த மாசம் வரைக்கும் நான் செஞ்ச நாலு சேவைய (நோ.. பயப்படாதேள்.. நான் சொல்றது சமூக சேவைய. சாப்பிடுற சேவை இல்ல) இங்க சொல்ல போறேன். தஞ்சாவூர் கல்வெட்டு கெடைக்கல, அதான் இங்க.

மொதல் சேவை:
நான் லஞ்ச் சாப்ட்டு முடிச்சிட்டு, தட்டு வைக்க போகும்போது, டமால் டுமீல்னு பெருசா ஒரு சத்தம். 'நாம மனசுக்குள்ள பாடுனது வெளிய கேட்டுருச்சு? அதுக்கு பில்டிங் இடியறது எல்லாம் ரொம்ப ஓவர்'னு நெனச்சுக்கிட்டே திரும்பினா, அங்க ஒரு பையனோட டிபன் பாக்ஸ் கீழ சிதறி கெடந்துச்சு. அத பார்த்த நம்ம பிஞ்சு மனசு தாங்குமா? அதனால ஓடிப்போய் டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்தேன். அதுக்கு அந்த பையன் மொகத்துல்ல எவ்ளோ சந்தோஷம், எவ்ளோ ஆனந்தம்? மகிழ்ச்சில 'Thanks. Thank you so much. Thank you very much'னு மாத்தி மாத்தி சொல்லிட்டு இருந்தான். நானும், 'Please don't mention it'னு கெத்தா சொல்லிட்டு நடைய கட்டுனேன். அன்னிக்கு என் மனசு எவ்ளோ லேசா இருந்துச்சு தெரியுங்களா? அன்னிக்கு பூரா 'லேசா..லேசா'னு என் மனசு பாடிட்டே இருந்துச்சு. மொள்ளமா.

ரெண்டாவது சேவை:
சமூக சேவை செய்யுறதே புண்ணியம். அதை புண்ணிய பூமியான சர்ச்சில் (கும்பிடுற சர்ச் பா.. கூகிள் சர்ச் இல்ல) செஞ்சா? புண்ணியம் XXL. ஒரு நல்ல ஞாயிற்று கிழமை சர்ச்சில் mass கவனித்து கொண்டிருந்தேன். நான் ஒக்காந்திருந்த பெஞ்சில் ஒரு இடமும், எனக்கு முன்னாடி இருந்த பெஞ்சில் ஒரு இடமும் காலியாக இருந்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தாங்க ஒரு தம்பதி (அந்த அம்மிணி ஒரு மினி ஸ்கர்ட்டு போட்டிருந்தாங்க. அந்த அய்யா அரை டிராயர் போட்டிருந்தார். தலையில் முள்முடி, அதாங்க spikes வெச்சிருந்தார்.) ஒண்ணா ஒக்கார எடம் இல்லைன்னு அம்மிணி என் பக்கத்துலயும், அய்யா முன்னாடி பெஞ்சுக்கும் போகும்போது நான், 'Excuse me'னு சொல்லி வெளிய வந்து அவர அம்மிணி பக்கத்துல ஒக்கார சொல்லிட்டு முன்னாடி பெஞ்சுல பொய் ஒக்காந்திக்கிட்டேன். அப்பவும் என் மனசு லேசாகி 'லேசா..லேசா' னு பாட ஆரம்பிச்சுது. 'உஷ். இது சர்ச். இந்த பாட்டெல்லாம் பாடப்படாது'னு சொல்லி அடக்கி வெச்சேன்.

மூணாவது சேவை:
நான் வழக்கமா ரவுண்டு கட்டியடிக்கிற பானி பூரி ஸ்டாலில் அன்னிக்கு ரவுண்டு ச்சே க்யூ கட்டி கூட்டம். எனக்கு பின்னாடி வந்த ரெண்டு பொண்ணுங்க, 'இவ்ளோ கூட்டமா இருக்கே. லேட்டாகும். ஹோஸ்டெல்ல சாப்பாடு க்ளோஸ் பண்ணிடுவாங்க. நாம இன்னொரு நாள் வரலாமா?'னு பேசிகிட்டு இருந்தாங்க. இத கேட்ட ஒடனே என் நெஞ்சு பதைபதைச்சுது. 'நீங்க எனக்கு முன்னாடி நின்னுக்கோங்க'னு எடம் விட்டு நின்னேன். என்னை ஒரு மார்க்கமா பார்த்துட்டே தேங்க்ஸ் சொல்லிச்சுங்க அந்த பொண்ணுங்க. ஆனாலும், என் மனசு அன்னிக்கு பூரா சந்தோஷமா 'லேசா.. லேசா'னு பாடுச்சு. ஏன்னா, தானத்தில் பெரியது மைதானம் ச்சே அன்னதானம். அதையும் நான் செஞ்சுட்டேன்ல.

பாருங்க, நான் செஞ்ச இந்த சேவைகள்னால தான் வெய்யில் பொளந்து கட்டுனாலும் எங்கூருல மழை பெயஞ்சிட்டு இருக்கு. என்னை ரோல் மாடலா வெச்சு நீங்களும் நாலு சமூக சேவை செய்யுங்க. அப்போ தான் நாட்டுல மும்மாரி பொழியும். இதுல இருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா, 'சமூக சேவைன்னா எனக்கு நெம்ப பிடிக்கும்.' :-)

பி.கு:- முதல் பத்தியில நாலு சேவைன்னு சொல்லிட்டு மூணு தான் சொல்லி இருக்க. இன்னொன்னு எங்க?ன்னு கேட்டீங்கன்னா, உங்களுக்கு இந்த வார கொட்டு. கவனிக்கவே இல்லைனா, இ.வா.பூச்செண்டு. நாங்களும் ஞாநி தான்.