Wednesday, March 24, 2010

டெர்ரர்’ஸ் எர்ரர்!

அவள்: ஏய்.. எப்படி இருக்கே?
நான்: ம்ம். நல்லா இருக்கேன்.
அவள்: கொட்டிக்கிட்டியா?
நான்: கொட்டிக்கிட்டியா கிட்டிக்கிட்டியானு பேசுன வந்து மண்டைல கொட்டிடுவேன் ஆமா.
அவள்: ஹா ஹா ஹா.. மொதல்ல வீட்டுக் கதவுக்குள்ளே நொழய முடியுமான்னு பாரு.

இப்படியெல்லாம் என்னை பார்த்து கேள்வி கேட்குற தைரியம் இந்த உலகத்துலேயே ஒருத்தருக்கு தாங்க இருக்கு. அது, என் தங்க தங்கை டீனா. அவள் வாய் பராக்கிரமங்களில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.

*****

அப்பா: டீனா. டெக்ஸ்ட் புக்ஸ் மாத்திரம் படிச்சா போதாதுமா. Extra Knowlede க்கு சப்ஜக்ட் சம்பந்தபட்ட புக்சும் படிக்கணும்.
டீனா: டாடி, புக்ஸ் படிக்க சொல்றத எப்போ நிறுத்த போறேங்க? மா, எங்கே இருந்து மா பெத்தீங்க அப்பாவே?
அம்மா: ம்ம்க்கும். நான் பெத்திருந்தா தங்கமால இருந்திருக்கும். உங்க பாட்டி பெத்தது அப்படி தான் இருக்கும்.
அப்பா: ??!!

(ஹ்ம்ம். இவள எங்கே இருந்து தான் பெத்தாங்களோ?)

*****

(இது, அவ 3 வயசா இருக்கும் போது உதிர்த்தது)

அம்மா: இன்னிக்கு அப்பாக்கும் எனக்கும் கல்யாண நாள். கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோடேல்க்கு போலாம்.
(டீனா அழத்துவங்குகிறாள்)
அம்மா: ஏம்மா அழறே?
டீனா: நீங்களும் டாடியும் கல்யாணம் பண்ணி போயட்டீங்கனா, நானும் ஆஷாவும் அனாதை ஆயடுவோம்ல. எங்களை யார் பார்த்துக்குவா?
அம்மா: ??!!

(எப்படியெல்லாம் யோசிக்கிறா?)

*****

டீனா: ஏய் உன் இளைய’தொல்ல’பதிய பத்தி SMS அனுப்பிச்சேனே படிச்சியா?
நான்: இப்படியெல்லாம் SMS அனுப்புனே, ‘சிங்கம்’ அசிங்கமாய்டும் ஆமா.
டீனா: ஹே ஹே.. நாங்க ‘சுறா’வ புட்டு செஞ்சு சாப்புடுவோம்ல.
நான்: கிர்ர்ர்.

(என்ன ஒரு வில்லத்தனம்?)

*****

பார்த்தீங்களா மக்களே இந்த கொடுமையே? நான் டீனா கிட்ட பஞ்சர் ஆகாத நாளே இல்ல. அவ வாயாலயும் கையாலயும் அடிக்கிறத தினமும் வாங்கி, நான் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ ஆய்ட்டேன்.

என் அப்பாவே அவர் ஆபீஸ்ல, அவரோட சிம்ம கர்ஜனைக்காக ‘The Terror’னு கூப்பிடுவாங்களாம். இப்போ இது எதுக்குன்னு கேக்குறீங்களா? ஒருமுறை தலைப்ப படிச்சு பாருங்க, என் தங்கச்சிய பத்தின உண்மை வெளங்கும். :)

Friday, March 19, 2010

கூல்ட்ரிங்ஸ்!!

தமிழ். வீட்டிற்கு செல்லப்பிள்ளை. குழந்தைகளை அவனிடம் விட்டுவிட்டு வீட்டு வேலைகளை நிம்மதியாக செய்து முடிக்கலாம். அவ்வளவு பொறுப்பாக பார்த்து கொள்வான். அமைதியும் கூட. அவன் வயது சிறுவர்கள் அடிதடி ஆட்டத்தில் இறங்கினால், அந்த இடத்தில் இருக்க மாட்டான், தமிழ். இந்த நல்ல பெயர் எல்லாம் சிறிது நாளைக்கு தான் நிலைத்து இருந்தது. இரண்டு சம்பவங்களால் அவனது நல்ல பிள்ளை இமேஜ் தூள் தூளானது. தண்ணீர் கலைகிறது. அதாங்க, ப்ளாஷ்பேக்.


சம்பவம் 1:

தமிழின் மாமா ஒரு குடிகாரர். மொடாகுடியர் இல்லையென்றாலும், தினமும் இரவு ஒரு பெக் அடித்து விட்டு தான் தூங்குவார். அவர் குடிக்கும்பொழுது, தமிழ் அவர் பக்கத்தில் நின்று கொண்டு, “என்ன மாமா இது?” என்று கேட்பான். அவரும், “இது கூல்டிரிங்க்ஸ் டா” என்பார். “எனக்கும் வேணும்” என்று தமிழ் அடம பிடித்தால், “இதெல்லாம் சின்ன பசங்க குடிக்க கூடாது. சளி பிடிச்சிடும்” என்று கூறி அனுப்பி விடுவார். மாமா குடித்து விட்டு பாட்டிலை கட்டிலுக்கு அடியில் துணி போட்டு மறைத்து வைப்பது வழக்கம். ஒரு நாள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாண்டு கொண்டிருந்தார்கள். தமிழ் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ள, அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று துணியை விலக்கி பார்த்தால், ‘கூல்டிரிங்க்ஸ்’ பாட்டில். உற்சாகம் தாங்காமல் மற்ற சிறுவர்களை எல்லாம் ரகசியமாக கூப்பிட்டு “வாங்கடா, கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம்” என்றான். “முதல்ல எனக்கு குடுடா” என்று கெஞ்சிய வெண்ணில்லாவிடம் பாட்டிலை குடுத்தான். அவளும் சிறிது குடித்து விட்டு, “அய்யய்யே! மருந்து மாதிரி கசக்குது, நீயே குடி” என்று கொடுத்துவிட்டாள். மருந்து என்றவுடன் மற்றவர்களும் வேண்டாம் என்று சொல்லிவிட, ஆசையோடு பாட்டிலை வாய்க்குள் கவிழ்த்தான். முதல் மிடறு கசத்தது. ஆனால், என்னவோ பிடித்திருந்தது. இரண்டாவது வாய் குடிக்கலாம் என்று பாட்டிலை தூக்கியபோது சித்தி பார்த்துவிட்டாள். பிறகென்ன, அம்மா தமிழை பட்டை கிளப்ப, அத்தை மாமாவை பட்டை கிளப்பினார்.


சம்பவம் 2:

குடும்பத்தோடு அனைவரும் ஊட்டி சென்ற சமயம். குளிரில் எல்லாரும் நடுங்கி கொண்டு இருந்தார்கள் என்று மாமா கொண்டு வந்திருந்த பிராண்டி பாட்டிலில் இருந்து கொஞ்சம் ஒரு டம்ளருக்குள் ஊற்றினார். “அரை டம்ளர் அளவு ஊத்தியிருக்கேன். பன்னண்டு பேரும் குடிக்கணும். டேய் தமிழ், ஒரு வாய் குடிச்சிட்டு மிச்சத்தே மத்தவங்களுக்கும் குடுடா” என்றார். ‘கூல்டிரிங்க்ஸ்’ குடிக்கும் ஆர்வத்தில் தமிழ் அவர் சொன்னதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. டம்ளரை வாங்கி அத்தனையையும் குடித்து விட்டு “I am a complan boy” என்று வாயை துடைத்து கொண்டு கூறினான். அவ்வளவு தான். மீண்டும் அடி பட்டையை கிளப்பியது. இம்முறை மாமாவிடமிருந்து.

இவ்விரண்டு சம்பவங்களிலிருந்து தமிழ் ஒன்றை புரிந்து கொண்டான். கூல்டிரிங்க்ஸ் ‘உடல்நலத்திற்கு’ கேடு என்று. அன்றிலிருந்து இன்று வரை தமிழுக்கு கூல்டிரிங்க்சும் சரி, ஹாட்டிரிங்க்சும் சரி, a definite no-no. அப்பேர்பட்ட தமிழுக்கு இன்று வந்தது சோதனை. அவன் காதலி ரூபத்தில்.


*****


“தமிழ். நான் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க போறேன். தெரியும் இல்லே?”

“ம். தெரியும்.” குரல் கம்மியது தமிழுக்கு.

“அவர் நல்லா சம்பாதிக்கிறாரு. மும்பைலே சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு. நான் கேட்டதெல்லாம் வாங்கி தர்றேன்னு சொல்லி இருக்காரு”

“என்னம்மா பேசுற நீ? நான் உனக்காக என்னல்லாம் செஞ்சிருக்கேன். நீ கேட்டதெல்லாம் நானும் வாங்கி குடித்திருக்கேன். உனக்காக எவ்வளோவோ விட்டுக்கொடுத்திருக்கேனே? எல்லாத்தையும் மறந்துட்டியா?” அழுகையோடு கேட்டான்.

“ம்ம். நீ செஞ்சே. இல்லேன்னு சொல்லலே. ஆனா, நான் உன் கூட இருக்குறத விட அவர் கூட இன்னும் வசதியா இருப்பேன். பை.”

இந்த வார்த்தைகள், சாப்பாட்டில் மொய்க்கும் ஈ போல் தமிழின் மனதை அசிங்கப்படுத்தியது.

“டேய் மச்சான்! அவள பத்தி நான் உன் கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீ கேட்கல. அவள மாதிரி பொண்ணுங்க எல்லாம் safety, security பாப்பாளுக டா. நமக்கு சரி பட்டு வராது. சரி. நடந்தது எல்லாம் நல்லதுக்குனு நினைச்சிக்கோ. டாஸ்மாக் போய் சரக்க உள்ளே ஏத்துனோம்னா எல்லாம் சரியாயிடும். எந்திரிச்சு வாடா.” சிவா கூப்பிட்டான். வானம் மோடமாக இருந்தது.


*****


டாஸ்மாக். தன் முன்னிருந்த பாட்டிலை உற்று பார்த்தான் தமிழ்.

“நீ என்னை பத்தி கொஞ்சம் யோசிச்சியா நந்தினி? நீ இல்லாம எப்படி இருப்பேன்?”

“என்ன, கொஞ்ச நாளைக்கு தாடி வளத்து டாஸ்மாக் முன்னாடி விழுந்து கிடப்ப. வீட்லே கல்யாணம் பண்ணி வெச்சாங்கன்னா, நீயே கொஞ்ச நாள்லே எல்லாத்தயும் மறந்துடுவே. இதுக்கெல்லாம் கவலை பட்டா வாழ்கையை ஓட்ட முடியாது.”

அவள் சொன்னது உண்மையாவதை நினைத்து புலம்ப துவங்கினான் தமிழ்.


*****


தமிழ் டாஸ்மாக்கில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு வந்தார் அவன் மாமா.

“மாப்ள. என்னடா இது? எதாவது பிரச்சினையா? சரக்கடிச்சியா? கண்ணெல்லாம் செவந்திருக்கு? எதுவா இருந்தாலும் வீட்லே போய் பேசிக்கலாம்டா.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. நான் நல்லா தான் இருக்கேன்.”

“மாமா”

“சொல்லு மாப்ள”

“மாமா, நான் இன்னிக்கு அம்மா அப்பா கிட்ட பேசுறேன். உங்க வீட்ல சம்மதம்னா, நாளைக்கு நாங்க வெண்ணில்லாவே பாக்க வர்றோம். என்ன சொல்றீங்க மாமா?”

“மாப்ள. இப்படி கூப்பிடுறதுக்கு உனக்கு இன்னுமாடா அர்த்தம் புரியல?”

சிரித்தான் தமிழ். டாஸ்மாக்கை விட்டு வெளியில் வந்தான். வானம் தெளிவாக இருந்தது.


*****

பி.கு: First attempt. மங்களகரமா இருக்கட்டும்னு சரக்க பேஸ் பண்ணி ஒரு கதை. எப்படி இருக்குன்னு சொல்லுங்க. :)

Tuesday, March 16, 2010

மது!!

மது!!
பார்வையில் போதை ஏற்றுபவள்.
கன்னத்து மச்சத்தால் உள்ளத்தில் அச்சானவள்.
சிறிய கண்கள். சிரிக்கும் பொழுது மறையும்.
ரோஜா மொட்டில் பனித்துளி எப்பொழுதும் இருக்கும்.
அவள் புன்னகை நம்மை தேவலோகத்தில் மிதக்க செய்யும்.

மது!!
அவளை தூரத்தில் பார்த்தாலே தியான நிலை அடைந்து விடுவேன்.
என்னோடு இருக்கும் பொழுது சொல்லவா வேண்டும்??
அந்த சொர்க்கத்தில் உள்ளே புகுந்தான் கயவன்.
அவளை பெற்றவன்.
என் உயிரை என்னிடம் இருந்து பிரித்தான்.
ஆனால், நாளை மீண்டும் என்னோடு இருப்பாள்,
என் பக்கத்து வீட்டு குட்டி தேவதை, மது!!

பி.கு.1: நான் ப்ளாக் ஆரம்பிச்சதுலே இருந்து 'என்னை பத்தி கவிதை எழுது'னு ஒரே அன்பு தொல்லைங்க (அமைதி! அமைதி!). அப்படி கேட்ட அன்பு தொல்லை ச்சே மதுக்காக ஒரு மொக்கை கவிதை. அது மட்டும் இல்ல, மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆனா மாதிரி ஒரு பீலிங்.

பி.கு.2: " 'தியான நிலை'னு சொல்லி இருக்கியே, நீ நித்யானந்தாவுக்கு சொந்தமா?" அப்படின்னு யாரவது பின்னூட்டம் போட்டீங்க, ரணகளம் ஆகி போய்டும் ஆமா. x-(

பி.கு.3: மொக்கை போஸ்ட்ன்றதுனாலே, நீங்க எப்படி எல்லாம் மொக்கையா யோசிச்சு கமெண்ட் பண்ணுவீங்கனு என் சூப்பர் பிரைன் யோசிச்சதோட பயன் தான் பி.கு.2. எப்பூடி?

Monday, March 08, 2010

பெண்கள் தின நல்வாழ்த்துகள்!!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
-- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Woman is the companion of man, gifted with equal mental capacity.
-- மகாத்மா காந்தி


HAPPY WOMEN'S DAY! :)


ஒரு பெண்ணின் படம் இங்கே கலைந்துள்ளது:

யார்னு கண்டுபிடிங்க பாப்போம்!

provided by flash-gear.com


மேல உள்ள puzzle ஒழுங்கா தெரியலேனா இங்க போங்க:

http://six.flash-gear.com/npuz/puz.php?c=v&id=3041154&k=2121844


பி.கு:- மேல உள்ள URL க்கு லிங்க் எப்படி குடுக்குறதுனு தெரியல. "Insert Hyperlink" குடுத்தாலும் லிங்க் டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது. அதனால, puzzle பாக்க முடியாதவங்க சிரம படாம லிங்க் IE லே copy, paste பண்ணுங்க. யாருக்காவது லிங்க் எப்படி இன்செர்ட் பண்றதுனு தெரிஞ்சா சொல்லுங்க பா ப்ளீஸ் :)

Wednesday, March 03, 2010

அயர்ன் பாக்ஸ் சுட்டதடா..

அலாரம் ஷார்ப்பா காலை 8:30 மணிக்கு அடிச்சு எழுப்பி விட்டுருச்சு. கண்ண தொறக்க முடியாம ஒரு 5 நிமிஷம் படுக்கலாம்னு படுத்தேன். எந்திரிச்சு பார்த்தா மணி 11. ஆத்தாடி, ஆபீஸ் காப் (cab) மிஸ் ஆய்டுச்சுனு அவசர அவசரமா எந்திரிச்சேன்.


இன்னும் 15 நிமிஷத்துலே கரண்ட் போய்டும். டிரஸ் வேற அயர்ன் பண்ணலே. சரி, மொத காரியமா அயர்ன் பண்ணுவோம்னு டிரஸ், அயர்ன் பாக்ஸ் எல்லாம் ரெடியா கட்டில் மேல வெச்சேன். பிளக் போட்டு திரும்புறேன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம். என்னான்னு திரும்பி பார்த்தா, தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தி போட்ட மாதிரி ப்ளக் பாயிண்ட்லே இருந்து நெருப்பு வருது. அய்யய்யோனு அலறி சுவிட்ச் ஆப் பண்ணேன். பிளக் பாயிண்ட், நான் சுட்ட அப்பளம் மாதிரி கருகி போய்டுச்சு. அயர்ன் பாக்ஸ் பிளக், காதலியே கண்ட காதலன் மாதிரி உருகிடுச்சு.


எச்சிலே விழுங்கிட்டு சுத்தும் முத்தும் பார்த்தேன். நல்ல வேளை லைட், ஃபேன் எல்லாம் நல்ல படியா ஓடுச்சு. ஒரு பெருமூச்சே வெளிய விட்டுட்டு, பிளக் பாயிண்ட்லே ஏதோ கோளாறு போல, நம்ம வேற பிளக் பாயிண்ட்லே போட்டு பாப்போம்னு அயர்ன் பாக்ஸ் பிளக்க வேற பிளக் பாயிண்ட்லே சொருகினேன். பயப்புள்ளே, ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷனும் காட்டலே. இதென்னடா சோதனைனு, பக்கத்து ரூம்லே இருந்து அயர்ன் பாக்ஸ் கடன் வாங்கி அயர்ன் பண்ணி ஒரு வழியா 12:30 க்கு வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.


அப்புறம் தான் தோணுச்சு, நாளைக்கு அயர்ன் பண்ண வழி இல்லையே. எவ்ளோ நாள் தான் பக்கத்து ரூம்லே இருந்து கடன் வாங்குறது. நமக்குனு ஒரு பிரஸ்டீஜ் இருக்குலே. அதனால, திரும்பவும் வீட்டுக்கு வந்து அயர்ன் பாக்ஸ் எடுத்து போய் கடையிலே ரிப்பேருக்கு குடுத்தேன். அந்த கடைக்காரன் வெவரமானவன். என் நெத்தியிலே என்னாத்தே படிச்சானோ தெரியல, மேடம் சர்வீஸ் அமௌன்ட் Rs.800/- அப்படின்னு ஒரு குண்டு தூக்கி போட்டான். இதுக்கு நான் ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கிடுவேன்னு சொல்ல, அவன் எங்க கடையிலே நெறைய மாடல் இருக்கு மேடம், பாருங்கனு சொன்னான். அவ்வ்வ்வ்வ்வ். எப்படியும் அயர்ன் பாக்ஸ் வேணும் அதனாலே, தொலையுதுன்னு ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கியாச்சு.


இந்த களேபரம் எல்லாம் முடிய மணி 1:00 ஆய்டுச்சு. ஒரு ஆட்டோ புடிச்சு, ஆபீஸ்க்கு வந்து க்யூபிக்கில்லே பேக் வைக்கும் போது மணி 1:30. அய்யய்யோ, லஞ்ச் டைம் ஆய்டுச்சு. தன்யா வெயிட் பண்ணிட்டு இருப்பானு, பில்டிங் அதிர அவ ப்ளோருக்கு ஓடினேன். அங்க பார்த்தா, காஷ்மீர் தீவிரவாதிய கண்ட கேப்டன் மாதிரி கண்ணே உருட்டி, செவப்பாக்கி நின்னுட்டு இருந்தா தன்யா. அதே பார்த்து பயந்து, “அயர்ன் பாக்ஸ், ரிப்பேர், புதுசு வாங்கியாச்சு” னு மணிரத்னம் பட டயலாக் எல்லாம் சொல்லி, அவ கை, கால்லே விழுந்து, காண்டீன்க்கு அவள கூட்டிக்கிட்டு பறந்தேன். பசி!